Take a fresh look at your lifestyle.

மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா நெருக்கடி

43

இந்தியா, அமெரிக்கா பயங்கரவாத கூட்டு நடவடிக்கை குழுவின், 17-வது கூட்டமும், இரு தரப்பு பேச்சுவார்த்தையின் 3-ம் அமர்வும் காணொலி காட்சி வழியாக 2 நாட்கள் நடந்தது.

இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரு தரப்பிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

இதில் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம் ஆண்டு, ஜனவரி 2-ந் தேதி நடந்த தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெருக்கடி தரப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறி இருக்கும் பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பயங்கரவாத பிரதிநிதிகளின் பயன்பாட்டை இரு தரப்பினரும் கண்டிக்கிறோம். அனைத்து வடிவங்களிலுமான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஐ.நா.சபையால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள அல் கொய்தா, ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சமீபத்தில் இந்திய சட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனி நபர்களை தடை செய்வது, பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முன்னுரிமைகள், நடைமுறைகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண். 2396-ன்படி சர்வதேச பயங்கரவாத குழுக்களின் பயண திறனை சீர் குலைப்பதற்கான பிற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் அர்ப்பணிப்பு வேண்டும்.

* பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுப்பது, பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை தடுப்பது, அடிப்படைவாதத்தை எதிர்கொள்வது, இணையதளத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்துவது, பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டம், பயங்கரவாதிகள்மீது வழக்கு போடுதல் போன்ற சவால்களை சந்திப்பதற்கான தங்கள் முயற்சிகள் பற்றி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துக்கூறினர்.

* இரு தரப்பினரும் பரஸ்பர சட்டம் மற்றும் கைதிகள் பரிமாற்ற உதவிகள், இரு தரப்பு சட்ட அமலாக்கல் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.