Take a fresh look at your lifestyle.

ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு – இருதரப்பு ராணுவ உறவுகளை மேம்படுத்த ஒப்புதல்

27

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் தனது நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடனான உறவுக்கு அமெரிக்கா வலுவான உறுதி அளித்துள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், ஜப்பான், தென்கொரியா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் வந்தார்.

டெல்லியில் அவர் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். மோடியுடனான சந்திப்பின்போது, இந்தியாவுடனான ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜோ பைடன் நிர்வாகத்தின் விருப்பத்தை அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனான சந்திப்பின்போது, பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை உள்ளிட்ட இரு தரப்பு பரஸ்பர அக்கறை கொண்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசினார்கள்.

நேற்று காலையில் அவர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி விஞ்ஞான பவனுக்கு வந்த அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு ராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் விரிவாக விவாதித்தனர்.

அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அவரது குழுவினருடன் விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியாவும், அமெரிக்காவும், விரிவான உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழுத்திறனையும் உணர்ந்து கொள்ள இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளோம்.

இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் இருதரப்பு ராணுவ சேவைகளை விரிவுபடுத்துவது, தகவல்களை பகிர்ந்து கொள்வது மற்றும் பரஸ்பர தளவாட ஆதரவு அளிப்பது குறித்து எங்கள் பேச்சின்போது கவனம் செலுத்தினோம்.

இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகள் பற்றியும் பேசினோம். அமெரிக்க, இந்திய பசிபிக் ராணுவ தலைமை இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பை தொடர வேண்டும் என ஒப்புக்கொண்டோம். இருதரப்பும் செய்து கொண்ட அடிப்படை ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டு, பரஸ்பர நன்மைக்கான அவற்றின் முழுத்திறனை உணர்ந்து கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினோம்.

பாதுகாப்பு துறையில் தாராளமயமாக்கப்பட்ட நேரடி அன்னிய முதலீடு கொள்கைகளின் நன்மைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு, அமெரிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்தேன். ராணுவ துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறியதாவது:-

அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும், கூட்டு நாடுகளுக்கும் ஜோ பைடன் நிர்வாகத்தின் வலுவான அர்ப்பணிப்பு பற்றிய செய்தியை தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

விரைவாக மாறி வரும் சர்வதேச சூழலுக்கு மத்தியில், இந்தியா மிக முக்கியமான கூட்டாளியாக உள்ளது. மேலும் பிராந்தியத்துக்கான அணுகுமுறையின் மைய தூணாக விளங்கும் இந்தியாவுடன் முன்னோக்கி பார்க்கும் கூட்டுக்கு அமெரிக்கா உறுதி அளிக்கிறது.

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான முக்கிய ராணுவ கூட்டினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் பேசினோம். இது ஜோ பைடன் நிர்வாகத்தின் முன்னுரிமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.