Take a fresh look at your lifestyle.

தொடர்ந்தும் தேடப்படும் தப்பிச் சென்ற பெண்

20

நாட்டில் இன்றைதினம் 257 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் 19 தொற்று நோயில் இருந்து இன்றையதினம் மேலும் 319 பேர் குணமடைந்தனர்.

13 ஆயிரத்து 590 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது இன்னும் ஐந்தாயிரத்து 873 பேர் கொவிட் 19 நோய்தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரையில் 19 ஆயிரத்து 537 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை – லிப்பகல பகுதியில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுதி ஆகியுள்ளது.

அண்மையில் கொழும்பில் இருந்து சென்ற 21 வயதான ஒருவரே இவ்வாறு கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டதாக, அந்த பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அதேநேரம் தலவாக்கலை பெல்மோரல் – க்ரைஸ்டல் பிரிவில் 52 வயதான ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி முதல் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 606 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ஐந்தாயிரத்து 796 பேரும், காலியில் 193 பேரும், அனுராதபுரத்தில் 54 பேரும், புத்தளத்தில் 66 பேரும், குருணாகலையில் 248 பேரும், நுவரெலியாவில் 54 பேரும் இந்த காலப்பகுதியில் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, 30 பேர் மாத்தறையிலும், 72 பேர் மட்டக்களப்பிலும், 21 பேர் ஹம்பாந்தொட்டையிலும் களுத்துறையில் 631 பேரும், கண்டியில் 288 பேரும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை காவற்துறையைச் சேர்ந்த 598 பேரும், சிறப்பு அதிரடிப்படையினர் 224 பேரும், சிறைச்சாலைகளில் 629 பேரும் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் ஆயிரத்து 556 பேருக்கும் இந்த காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, கொவிட் தொற்றுடன் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற பெண் தொடர்ந்தும் தேடப்படுகிறார்.

இதற்காக ஏற்கனவே 3 காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தேடுதலை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.