Take a fresh look at your lifestyle.

குறுகொட ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா தொற்றாளர் எண்ணிககை 159ஆக உயர்வு

109

5 ஆயிரத்து 600 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குறுகொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 81 பேருக்கு வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேநேரம், அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப்பெற உள்ளதாக ஹொரணை நி;ர்வாக பொது சுகாதார பரிசோதகர் பீ.சீ.சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் மனைவி பாத்திமா சாதியாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

காவல்துறையினர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட கொவிட்-19 நோயாளர்களான கைதிகளுள் அடங்குவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பழைய போகம்பரை சிறைச்சாலையில், 7 ஆண் கைதிகளுக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்ட குறித்த ஏழு பேரும், வெலிகந்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு – விளக்கமறியல் சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால், அங்கிருந்த சில கைதிகள் பழைய போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அவ்வாறு அனுப்பட்ட கைதிகளில் சிலருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 300 பி.சீ.ஆர் பரிசோதனைகளில், ஒவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களது ஒத்துழைப்பின்றி, கொவிட்19 தொற்றுப் பரவலை தடுப்பது கடினம் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்துள்ளார்.