Take a fresh look at your lifestyle.

முஹம்மது நபியின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம்

72

முஹம்மது நபியின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.

இலங்கை இஸ்லாமியர்கள் உட்பட உலக வாழ் இஸ்லாமியர்களினால் மீலாதுன் நபி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தனது பிறப்புக்கு முன்பே தந்தையை இழந்த நபியவர்கள் ஆறாவது வயதிலேயே தாயாரையும் இழந்தார்.

ஜாஹிலிய்யாக் காலம் என்ற மூடக் கொள்கைகள் நிறைந்த அந்த காலத்தில், முஹம்மது நபியவர்கள் உண்மைக்கும் நம்பிக்கைக்கும் அல் அமீன் அஸ்ஸாதிக் என்ற சிறப்பு நாமங்களாலும் அழைக்கப்பட்டார்.

40 வயதில் நபித்துவத்தைப் பெற்றுக்கொண்ட நபியவர்கள் 10 வருடகாலம் மக்காவில் அழைப்புப் பணியில் ஈடுபட்டார்.

பொறுமை, விட்டுக் கொடுப்பு , அன்பு, மரியாதை, மற்றவர்களை மதித்தல் என்பன அவரது வாழ்வில் நிறைந்து காணப்பட்டன.

இதேவேளை, இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மது நபியவர்களின் மீலாதுன் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மீலாதுன் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஹம்மது நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது தமது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து குரோதங்கள் மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.

முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவித்து உலகெங்கிலும் பரவிவரும் கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பாரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளது.

இத்தகையதொரு கால சூழ்நிலையில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முதலிடமளித்து வாழ்வது எமக்கு உள அமைதியை பெற்றுத்தரும்.

அதேபோன்று பரஸ்பர நலன்பேணல், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் பொது நலனை அடைந்துகொள்வதற்காக நபிகளாரின் வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட நன்நெறிகளை நாம் சமூகமயப்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.