Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான தகவல்கள்

42

நாட்டில் நேற்றைய தினம் 586 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 115 பேருக்கும், பேலியகொடை மீன் சந்தையுடன்; தொடர்புடைய 467 பேருக்கும், நாடு திரும்பிய கடலோடிகள் 4 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியில் இருந்து மேலும் 67 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 5 ஆயிரத்து 630 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நுவரெலிய மாவட்டத்தில் இதுவரையில் 33 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

நுவரெலிய மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 25 பேருக்கும் மினுவாங்கொடை கொத்தணியில் 8 பேக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலிய பொது வைத்தியசாலையில் நாள் ஒன்றில் 60 முதல் 90 வரையான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரையில் நுவரெலிய பகுதிக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்ட செயலாளரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய நகரில் அமைந்துள்ள விக்டோரியா பூங்கா, கிரகரி குளம் மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குறித்த மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கரவெட்டி – இராஜகிராமத்தில் 60 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிடிப்பனை மீன் விற்பனை சந்தையில் கடந்த 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நீர்கொழும்பில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் இரண்டு காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 15 அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நான்கு காவற்துறை அதிகாரிகளுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.