Take a fresh look at your lifestyle.

மாய விம்பத்தை ஏற்படுத்துகின்றாரா பவித்ரா வன்னியாரச்சி? வெளியவரும் பகீர் தகவல்

32

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், நாளாந்தம் மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள், சுகாதார அமைச்சரின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் கடந்த நாட்களில் மேற்காள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவ்வாறான ஒரு நிலைமை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது.

புள்ளி விபரங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக காணப்படுகின்றது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு இலட்சத்து மூவாயிரத்து 600 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாடு என்ற வகையில் நாம் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளோம். இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய இந்த எண்ணிக்கையை நாம் கணிப்பிட்டுள்ளோம்.

எனினும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இன்னமும் 97ஆயிரம் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவே தெரிவிக்கின்றது. இங்கேயும் புள்ளிவிபரங்களில் முரண்பாடு காணப்படுகின்றது.

ஆகவே எதனை நாம் நம்புவது என்ற பிரச்சினை எழுந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், தகவல்களை முகாமைப்படுத்துவதற்கு இதுவரை சரியான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்றார்.