Take a fresh look at your lifestyle.

இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது 20 ஓவர் போட்டி 2வது வெற்றியை பெறுவது யார்?

35
இந்தியா  இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டத்தில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  இரவு நடக்கிறது.
முதலாவது ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 124 ரன்களுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தியதுடன் எளிதில் வெற்றியை தனதாக்கியது. இதேபோல் 2-வது ஆட்டத்தில் 165 ரன் இலக்கை இந்தியா சிரமமின்றி விரட்டி பிடித்தது.
அறிமுக வீரராக களம் கண்ட இளம் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து அணியின் நெருக்கடியை வெகுவாக குறைத்ததுடன், வெற்றியை நோக்கி வீறுநடை போடவும் வழிவகுத்தார். முதல் ஆட்டத்தில் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சி அளித்த கேப்டன் விராட்கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன், கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கடந்த ஆட்டத்தில் அச்சமின்றி அதிரடி காட்டி கலக்கிய இஷான் கிஷன் அணியில் இடத்தை தக்க வைத்து கொள்வார். அதேபோல் புதிதாக இடம் பெற்று பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத சூர்யகுமார் யாதவும் நீடிப்பார். ஆனால் முதல் 2 ஆட்டங்களில் 1, 0 சோபிக்காத தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கழற்றி விடப்படக்கூடும். அவருக்கு பதிலாக முதல் 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா களம் திரும்புவார் என்று தெரிகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் அதிரடிக்கு பெயர் போன பேட்ஸ்மேன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர். குதிங் காலில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஆட்டத்தில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது அந்த அணியின் பந்து வீச்சுக்கு மேலும் வலுசேர்க்கும். மார்க் வுட் களம் இறங்கும் பட்சத்தில் கிறிஸ் ஜோர்டானுக்கு கல்தா கொடுக்கப்படும்.
முதல் 2 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி வாகை சூடி இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் டாம் கர்ரனுக்கு இடம் கிடைப்பது கடினம் தான்.
முந்தைய ஆட்டத்தில் தங்களது அதிரடி பேட்டிங் வியூகத்துக்கு நல்ல பலன் கிடைத்ததால் இந்த ஆட்டத்திலும் அதனை தொடருவதுடன், தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 8 வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், விராட்கோலி கேப்டன், ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.
இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.