Take a fresh look at your lifestyle.

யோகிபாபுக்கு ஜோடியான பிரபல நடிகை

37
அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.
தமிழில் டூலெட், திரௌபதி படங்களில் நடித்த ஷீலா, மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் அளித்த பேட்டியில், தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
ஷீலா ராஜ்குமார்
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். அதுமட்டுமல்ல, கிரைம் திரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன்.
“டூ லெட்”, “கும்பளங்கி நைட்ஸ்”, படங்களுக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ரசிகர்கள் எப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். நானும் எனது கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார்.