Take a fresh look at your lifestyle.

HIRDARAMANI குரூப் வழங்கும் உத்தியோகபூர்வ அறிக்கை

42

அண்மையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் மீள ஆரம்பித்திருந்த நிலையில், எமது அர்ப்பணிப்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு அணிகள் அரசாங்க மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து எமது சகல ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான இனங்காணல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளனர்.

எமது சகல வளாகங்களிலும் தனியார் பிசிஆர் பரிசோதனைகளை நாம் முன்னெடுக்கின்றோம். இதன் பெறுபேறாக, எஹெலியகொட Hirdaramani Knit தொழிற்சாலையைச் (HKEH) சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று காணப்படுகின்றமை 21 நவம்பர் 2020 சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் தற்போது திடமாக உள்ளதுடன், சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளை பின்பற்றுகின்றனர்.

முற்காப்பு நடவடிக்கையாக, முழு வளாகத்தையும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ளதுடன், தொழிற்சாலையைச் சேர்ந்த சகல ஊழியர்கள், இந்த வளாகத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த குரூப்பைச் சேர்ந்த ஊழியர்கள் என அனைவரையும் நாம் மேலதிக பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தியுள்ளோம். தொடர்பில் இருந்தவர்களை இனங்காண்பது, மேலதிக பரிசோதனைகளை ஏற்பாடு செய்வது மற்றும் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை இனங்காண்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருகின்றோம். இந்த காலப்பகுதியில் தொழிற்சாலை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

சகல ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு Hirdaramani முன்னுரிமையளிப்பதுடன், தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உச்ச உதவிகளை வழங்கும். அத்துடன், ஏனைய ஊழியர்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களை குறைத்து தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அயராது உழைக்கும் சகல அதிகார அமைப்பினர் மற்றும் முன்னிலை ஊழியர்கள் என சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Hirdaramani நிர்வாகம்